யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் நேற்று(11.03.2026) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன.
வீடுகளில் அட்டகாசம் செய்த கும்பல்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக்குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை தட்டான்குளம் வீதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு, சிறிய பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை வடக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
அதே போன்று, வீட்டிலிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதனையடுத்து, கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை, வடக்குக் கிழக்கு ஊரொல்லையிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த இரண்டு கார்கள், பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நெருக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், கிராமத்து இளைஞர்களால் தாக்குதல் மேற்கொண்டவர்களில் 4 பேர் பிடிக்கப்பட்டனர்.
ஏனையவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் கொட்டன்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri