செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பகுதி : மயான எரிதகன மேடையின் அத்திவாரம் இடிந்து வீழ்ந்தது
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது எரிதகன மேடைக்கு அருகில் பல மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன.
மீண்டும் அகழ்வுப்பணிகள்
இந்தப் புதைகுழியானது எரிதகன மேடையின் அத்திவாரம் வரை நீண்டு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக, குறித்த பகுதி சதுப்பு நிலம் என்பதால் அத்திவாரத்துக்கான பிடிமானம் இல்லாத நிலையிலேயே அது இடிந்து வீழ்ந்துள்ளது.
மூன்றாம் கட்ட அகழ்வின் முதலாம் கட்டப் பணிகளின்போது, இந்த அத்திவாரத்துக்குக் கீழாக என்புத்தொகுதியொன்று முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தது.
எனினும், குறித்த என்புத்தொகுதி முன்னரே பாதுகாப்பான முறையில் மணலிடப்பட்டு மூடப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது அது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.