சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்க விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரை பதவிலிருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் (05) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பு
இந்த நிலையில் நேற்று (05) வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையில் பிரதி தலைவராக பதவி வகித்து வந்த ஞானப்பிரகாசம் கிஷோரை, வட மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.
.இந்த பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என குறிப்பிட்டும் அதனை இரத்து செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன.
பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள தீர்ப்பு
இதன்போது மனுதாரர் சார்பிலும், பதிலாளிகள் சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றத்தினால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு, சாவகச்சேரி நகரசபை நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நடைமுறைகள் தொடர்பிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.