முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்..! சிறைச்சாலையில் தற்போதைய நிலைமை
ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகிலவிராஜ்
இதற்கமைய, தற்போது அகில விராஜ் கரியவசம் ஏனைய கைதிகள் குழுவுடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் மாத்திரமே அவருக்கும் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று (05) முற்பகல் முன்னலையான போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு
குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 2,768,836.14 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கப்பட வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, 'ஊழல்' குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.