நாமல் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்ல! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உரிய சட்ட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்லர். முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத் தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இந்தக் கைது இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் வழக்கம்.
சட்டபூர்வ கைது
இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டபூர்வ கைதுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்ட அமுலாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதையே செய்துள்ளோம்.
மக்கள் ஆணையுடன் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும், மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் மக்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.