ஆலய நிர்வாகத்தினர் எதிர்நோக்கி வந்த பாதை பிரச்சினையை தீர்த்து வைத்த சாள்ஸ் நிர்மலநாதன்(Video)
வட்டுவாகல் - சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினர் எதிர்நோக்கி வந்த பாதை பிரச்சினையை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று தீர்த்து வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் புதன்கிழமை (31.05.2023) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயம்
ஆலயத்தின் உற்சவ காலத்தில் தீர்த்தம் எடுத்து செல்வதற்கான பாதை இராணுவ உயர்
பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது.
அப்பகுதிக்குச் சென்று தீர்த்தம் எடுப்பதற்குரிய அனுமதி பல வருடங்களாக இராணுவத்தினரால் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் சகிதம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
எழுத்து மூல அனுமதி
மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பாகவும் இப்பாதையின் தேவை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவ கட்டளை அதிகாரிக்கு தெளிவுபடுத்தியதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் இடையூறு இன்றி தீர்த்தம் எடுப்பதற்குரிய அனுமதி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி யாரால் வழங்கப்பட்டது.
இது தொடர்பான அனுமதி எழுத்து மூலம் வழங்கப்படும் எனவும் இராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்.
மீள்குடியேற்றத்தின் பின்பு தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் எதிர் கொண்டு வந்த இப்பிரச்சனையை பாராளுமன்ற உறுப்பினர் தீர்த்து வைத்தமைக்கு அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



