பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி யார்.. சனல் 4இல் வெளியான மற்றுமொரு ஆதாரம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவியதாக அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு விசேட பிரபுக்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள்
சிறைச்சாலையில் தம்மை சந்திக்குமாறு பிள்ளையான் தொலைபேசியில் அறிவித்தார். பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் நான் சில கடும்போக்குவாதிகளை சந்தித்தேன்.
இவர்களுக்கு உலகத்தில் நாட்டம் கிடையாது மரணத்தை தழுவ தயங்காதவர்கள் எனவும் பிள்ளையான் அவர்களை அடையாளப்படுத்தினார்.
அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர், கருத்த உருவத்தைக் கொண்ட தாடியுடனான நபரை அழைத்து வந்தார். அவரே சைனி மௌவியாவார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் இந்த நபர்களே தொடர்புபட்டிருந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் இதனை மேற்கொண்டவர்கள் தாம் சிறையில் சந்தித்தவர்கள் என்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் போது பிள்ளையானை தொடர்பு கொண்ட போது “வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு” என பிள்ளையான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |