சனல் 4 திறந்திருக்கும் வாய்ப்புக்கள்
சனல் 4 வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான்.
அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், சாணக்கியனுக்கு ஆதரவான தரப்புகள் அதை வேகமாகவும் அதிகரித்த அளவிலும் பரப்பினார்கள்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சாணக்கியன் போன்ற தரப்புக்களிடம் பலமான சமூக வலைத்தள பிரச்சாரகக் கட்டமைப்புக்கள் உண்டு.
பரிகார நீதி
சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைதளக் கட்டமைப்புக் கூடாகத்தான் பிள்ளையானுக்கு எதிரான அசாத் மௌலானாவின் சாட்சியம் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவானது, ரணிலைப் பலப்படுத்தும் மேற்கத்தய நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பு எனலாம்.
அதேசமயம் அதில் தமிழ் மக்களுக்குச் சாதகமான அம்சங்கள் உண்டு. இலங்கை அரசுக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டுக்கள் அந்த வீடியோவில் உண்டு.
தமிழ் மக்கள் ஏன் பரிகார நீதியைக் கேட்கின்றார்கள் என்பதற்குத் தேவையான தர்க்கபூர்வமான சான்றுகளை அந்த வீடியோ வெளிப்படுத்துகின்றது.
அந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதனை விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் கேட்கிறார்.
முஸ்லிம்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேட்கிறார். குண்டுவெடிப்பின் போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரி கேட்கிறார்.
அனைத்துலக விசாரணை
முன்னாள் படைத்தளபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சரத் பொன்சேகா கேட்கிறார். அப்படி ஒரு விசாரணை நடக்கலாம் நடக்காமல் விடலாம்.
ஆனால் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தவர்களும் இருப்பவர்களும் அவ்வாறு கேட்பது என்பது இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்பின் பொறுப்புக்கூறும் தன்மையை கேள்விக்கு உட்படுத்துகின்றது. அது தமிழ்மக்களுக்குச் சாதகமானது.
தமிழ் மக்கள் வேறு காரணங்களுக்காக அதாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியை நிலைநாட்ட அனைத்துலக விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள்.
பேராயர் மல்கம் ரஞ்சித் அப்படிக் கேட்கமாட்டார். ஆனாலும் தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணையை நம்பவில்லை என்ற கேள்விக்கான விடை பேராயரின் கோரிக்கைக்குட் பொதிந்து கிடக்கின்றது.
எனவே சனல் 4 வெளியிட்ட வீடியோவானது இலங்கையில் மேற்கு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலானது என்பது அதன் ஒரு பரிமாணம்.
இன்னொரு பரிமாணம் அது தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்திற்குப் பலம் சேர்க்கின்றது என்பது, எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, சனல் 4 வீடியோ மட்டுமல்ல, இந்தப் பூமியிலே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அல்லது இலங்கைத்தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக வெவ்வேறு நாடுகள்,அனைத்துலக நிறுவனங்கள் முன்னெடுக்கும் வெவ்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஏதோ ஒருவிதத்தில் ஈழத்தமிழர்கள் கெட்டித்தனமாகக் கையாளவேண்டிய வாய்ப்புகள்தான்.
அவ்வாறான வாய்ப்புகளை வழங்கும் மேற்கத்திய மற்றும் பிராந்திய அளவிலான நகர்வுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
முதலாவதாக, அமெரிக்க கண்டத்தில் அங்குள்ள இரண்டு பெரிய நாடுகளாகிய அமெரிக்காவும் கனடாவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் அதன் படைப்பிரதானிகள் சிலருக்கு எதிராகவும் நிர்ணயகரமான நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றன.
போர்க்குற்றங்கள்
இலங்கைத் தீவின் இப்போதுள்ள படைத் தளபதியை அமெரிக்கா நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்திருக்கிறது. அதுபோலவே முன்னாள் கடற்படை தளபதி ஒருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு வழக்குத் தொடுக்க முடியும்.
அவ்வாறு மூத்த ராஜபக்சக்கள் இருவருக்கும் எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கத் தேவையான வாய்ப்புகளை அந்தச் சட்டம் அதிகப்படுத்தியிருக்கிறது. இது முதலாவது. இரண்டாவதாக, கனடாவில் இனப்படுகொலை தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவை தவிர ,மூத்த ராஜபக்சக்கள் இருவருக்கும் எதிராக இந்த ஆண்டு மார்ச் மாதம் கனடா தடைகளை விதித்திருக்கின்றது. அதன்படி அவர்கள் அந்த நாட்டில் தமது பினாமிகளின் ஊடாகக்கூட முதலீடுகளைச் செய்ய முடியாது.
கனடாவின் மேற்கண்ட நடவடிக்கைகள் அங்குள்ள பலமான தமிழ் புலம்பெயர் சமூகத்தின் வாக்குகளைக் கவரும் நோக்கிலானவை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவை அவற்றின் விளைவுகளைக் கருதிக்கூறின் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்பவை.
மூன்றாவது நகர்வு,ஐநாவின் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒர் அலுவலகம்.இது கடந்த ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46\1 தீர்மானத்தின் பிரகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் இயங்கி வருகிறது.
அங்கே சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கைக்கு எதிராக கையாளப்படத் தக்கவை. அண்மையில் தொடங்கிய ஐ.நா கூட்டத் தொடரில் மனித உரிமைகள் உதவி ஆணையாளர் அந்த அலுவலகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
ராஜதந்திர உள்நோக்கங்கள்
அடையாளம் காணப்பட்ட பத்து நபர்களைப் பற்றிய விபரங்களை உறுப்பு நாடுகள் கேட்பதாகவும் குறிப்பிடுகிறார். ஏற்கனவே அமெரிக்காவும் கனடாவும் குறிப்பிட்ட சில படை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கும் ஒரு பின்னணியில், மேலும் பத்து பேர் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது.
அந்த அலுவலகத்தால் சேகரிக்கப்படும் தகவல்களில் தமிழ்த் தரப்பு மனித உரிமை மீறல்களும் தொடர்பான தரவுகளும் இருக்கலாம்.
ஏனெனில் ஐநா அதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து தொகுக்கவில்லை. சீன விரிவாக்கத்தின் கருவிகளாகக் காணப்படும் ராஜபக்ச சகோதரர்களை எப்பொழுதும் சுற்றிவளைத்து வைத்திருக்கும் ராஜதந்திர உள்நோக்கங்கள் ஐ.நா தீர்மானங்களில் உண்டு.
ஆனாலும் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இலங்கைத்தீவின் அரச கட்டமைப்பும் அரசியல் பாரம்பரியமும் பொறுப்புக்கூறலுக்கு உகந்தவை அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு அவை உதவும்.
நான்காவது நகர்வு,இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ராமேஸ்வரத்தில் வைத்துக் கூறிய கருத்துக்கள்.
இலங்கைத்தீவில் இடம் பெற்றது பெரிய மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற பொருள்பட அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் இனப்படுகொலை என்று தமிழில் எழுதிருந்தார்.
தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள் இருந்து ஈழ ஆதரவாளர்களைப் பிரித்து எடுப்பதற்கான ஓர் உத்தியாகத்தான் அமித்ஷா அப்படிச் சொன்னார் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் அவர் ஒர் உள்துறை அமைச்சர்.அவர் அவ்வாறு கூறியிருப்பதை ஈழத்தமிழர்கள் பொருத்தமான விதங்களில் கையாளலாம்.
ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் 1983இல்,அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து “இலங்கையில் நடப்பது இனப்படுகொலையேயன்றி வேறு எதுவுமில்லை” என்று கூறினார்.
தமிழ்த் தேசிய நோக்கு நிலை
அடுத்த ஆண்டு அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சவான் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றில் “இனப்படுகொலையின் கூறுகள் உண்டு” என்று கூறினார். இப்பொழுது அமித்ஷா கூறியிருக்கிறார்.
அமித்ஷா கூறியிருப்பது பெருமளவுக்கு உள்நாட்டுத் தேர்தல் தேவைகளுக்கானதாக இருக்கலாம். ஆனால் அதை ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து வெற்றிகரமாகக் கையாள வேண்டும்.
[5SFTPI ]
அதற்குரிய உபாயங்களை ஈழத்தமிழர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கனடாவோ அமெரிக்காவோ அல்லது இந்திய உள்துறை அமைச்சரோ அல்லது ஐ.நாவோ அல்லது ஏனைய உலகப் பொது நிறுவனங்களோ சனல் 4வோ, தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து முடிவுகளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது.அம்புலிமாமாக் கதை போன்றது.
அரசியல் என்பது நலன்சார் உறவுகளின் இடையூடாட்டம் தான். அங்கே அறநெறி,நீதி நியாயம் போன்றவை இரண்டாம்பட்சம்.உலக நாடுகளும் உலகப் பொது நிறுவனங்களும் உலகளாவிய ஊடக நிறுவனங்களும் தங்கள் தங்கள் நலன்சார் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும்.
தமது அரசியல்,பொருளாதார,ராணுவ இலக்குகளை முன்வைத்தே எந்தவோர் அரசும் வெளிவிவகார முடிவுகளை எடுக்கும். ஆனால் இலங்கை சம்பந்தப்பட்ட அவர்களுடைய நகர்வுகள் ஈழத்தமிழர்கள் தமக்குச் சாதகமாகக் கையாளத்தக்கவைகளாக இருக்குமானால், அவற்றைப் பொருத்தமான விதத்தில் பொருத்தமான வேளைகளில், வெற்றிகரமாகக் கையாண்டு நீதிக்கான தமது போராட்டத்துக்கு எப்படி அணி சேர்க்கலாம் என்று ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்த மே 18ஆம் திகதியன்று கனேடியப் பிரதமர் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்குச் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அப்பதிவை எத்தனை, இலட்சம் தமிழ்மக்கள் திரும்பத்திரும்ப ரீ டுவிட் பண்ணினார்கள்? என்று ஓர் அரசியற் செயற்பாட்டாளர் கேட்டார்.
அங்கேதான் தெரிகிறது தமிழ் மக்களின் இலத்திரனியல் வலையமைப்புகளின் பலவீனம். கனேடியப் பிரதமரின் கருத்துக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாக்கு
அதாவது அதை இலங்கை அரசுக் கட்டமைப்பு எதிர்கின்றது. அப்படியென்றால் அதைத் தமிழ் மக்கள் எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்? கனேடியப் பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்துக்கு சென்று அவர் அங்கே பதிவிட்டிருப்பதை திரும்பத் திரும்ப இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் திரும்பத் திரும்ப ரீ டுவிட் பண்ணியிருக்க வேண்டும்.
அது அவருக்கு உற்சாகமூட்டும். தமிழ்மக்கள் கனடாவோடு தமது சகோதரத்துவத்தை,வாஞ்சையைத் தெரிவிப்பதற்கு அது ஓர் அருமையான சந்தர்ப்பமாக இருந்தது. அப்படிதான் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் இனப்படுகொலை என்று பிரசுரித்திருந்ததை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பரப்பியிருந்திருக்க வேண்டும்.
ஆனால் எத்தனை தமிழ்க்கட்சிகள் அல்லது தமிழ் அமைப்புகள் அல்லது செயற்பாட்டாளர்கள் அதை அவ்வாறு கையாண்டன? அதுதான் பிரச்சினையே.
மேற்சொன்ன வெளியுறவு வாய்ப்புக்களை வெற்றிகரமாகக் கையாளத் தேவையான ஒன்றிணைந்த கட்டமைப்புக்கள் தமிழ் மக்களிடம் இல்லை. கட்சிகளை அல்லது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கிகளைக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு இலத்திரனியல் கடடமைப்புக்கள் உண்டு.
ஆனால் தேசத்தைக் கட்டியெழுப்பும் கட்டமைப்புக்கள் குறைவு.அவ்வாறான ஒன்றிணைந்த கட்டமைப்புக்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில், ஈழத்தமிழர்கள் வெறுவாய் சப்பிக்கொண்டு, வீர வசனம் பேசிக்கொண்டு வெளியாருக்காகக் காத்திருக்கிறார்கள்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 18 September, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.