தமிழக அமைச்சரவையில் மாற்றம்: நிதித்துறை அமைச்சரின் பதவி பறிப்பு - பின்னணி என்ன..!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் (11.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தில் முதன்முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
அதன்படி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை - மனிதவள பிரிவு மேலான்மை துறையில் இருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைதுறையின் அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாற்றங்கள் என்னென்ன..!
தமிழக அமைச்சரவையின் புதிய அமைச்சராக இன்றைய தினம் டி.ஆர்.பி. ராஜா பதவியேற்றுள்ளார்.
தற்போதைய அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 35 ஆக நீடிக்கிறது.
எனினும், அமைச்சரவையில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
புதிய அமைச்சரவை
தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
புதிதாக அமைச்சரவையில் இணையும் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால்வளத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையை
செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |