இலங்கை தமிழர்கள் குடியிருப்பை திறந்து வைத்த தமிழக முதல்வர்
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
321 தனித்தனி வீடுகள்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்தில் இலங்கை தமிழர்களுக்காக ரூ. 17.17 கோடி இந்திய ரூபா மதிப்பில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் தலா 300 சதுர அடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.
முதன் முறையாக இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள்
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக முதன் முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொளி மூலம் திறந்து வைக்கும் நிகழ்வில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவும் கலந்துக்கொண்டார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மற்ற்றும் அதன் பின்னர் தமிழகத்தில் தஞ்சமடைந்த சுமார் ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பலர் முகாம்களிலும் ஏனையோர் தனிப்பட்ட ரீதியாக வீடுகளை வாடகைக்கு அமர்த்தியும் வசித்து வருகின்றனர்.