இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த செப்டெம்பர் மாதத்தில் -0.2 சதவீதமாகக் கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பீட்டின் பிரகாரம் ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம், செப்டெம்பரில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்
இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் சகல பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 203.1 ஆகப் பதிவாயிருப்பதுடன், இதனைக் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான 204.1 எனும் விலைச்சுட்டெணுடன் ஒப்பிடுகையில் இது 1.0 புள்ளி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அத்தோடு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் கணிப்பிடப்படும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் செப்டெம்பரில் -0.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆண்டுக்கு ஆண்டு உணவுப்பணவீக்கம் செப்டெம்பரில் 0.5 சதவீதமாகவும், ஓகஸ்ட்டில் 0.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப்பணவீக்கம் செப்டெம்பரில் -0.7 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |