நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மீதான மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாகாத நிலையில், சபாநாயகர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று(27.03.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி இடைநிறுத்தம் தொடர்பிலான மனு
சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சபாநாயகர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சாயா ஸ்ரீ நம்மூனி, இந்த வழக்கை சமரசமாக முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றிற்குத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சமரசத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று(27) இந்த மனு அழைக்கப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பிரதிவாதியான சபாநாயகர் சார்பில் தாம் முன்னிலையாகப் போவதில்லை என நீதிமன்றிற்கு அறிவித்தார்.
ஆட்சேபனைகளை வழங்க திகதி அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் சார்பில் தாம் முன்னிலையாவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகேஸ்வரன் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக ஒரு திகதியை வழங்குமாறு கோரினார்.
இதற்கமைய, மனு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதி தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.