ட்ரம்பால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுக்களுக்கு உருவாகியுள்ள சவால்
காசாவில் அமைதியை நிலைநாட்டவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள "Board of Peace" (அமைதி சபை) மற்றும் அதன் நிர்வாகக் குழுக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இந்த சபையின் பல முக்கிய சர்வதேசப் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும், பாலஸ்தீனியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மூன்று அடுக்குக் கட்டமைப்பு
ட்ரம்ப் தலைமையிலான இந்தத் திட்டத்தில் மூன்று அடுக்குக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்தாபக நிர்வாக சபையில் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்ததாக காசா நிர்வாக சபை எனப்படும் நிக்கோலே ம்லாடெனோவ் (Nickolay Mladenov) தலைமையில் இயங்கும் இக்குழுவில் துருக்கி, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளனர்.
அத்துடன் தேசிய நிர்வாகக் குழுவில் களத்தில் பணிகளைச் செய்ய அலி ஷாத் (Ali Shaath) தலைமையில் பாலஸ்தீனியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்ட சபை பாலஸ்தீனியர்கள் எவரும் இடம்பெறவில்லை. இது அவர்களின் தலையெழுத்தை மற்றவர்கள் தீர்மானிக்கும் "காலனித்துவத் தீர்வாக" இருப்பதாக விமர்சகர் முஸ்தபா பர்கௌதி உள்ளிட்டோர் சாடியுள்ளனர்.
கடும் எதிர்ப்பு தெரிவிப்பு
அத்துடன் ஈராக் போரில் முக்கியப் பங்காற்றிய டோனி பிளேயரை இக்குழுவில் சேர்த்துள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் பிரான்செஸ்கா அல்பானீஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

காசாவின் 80% கட்டடங்கள் இடிந்துள்ள நிலையில், சுமார் 6 கோடி டன் இடிபாடுகளை அகற்றுவதும், அங்குள்ள கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்வதும் இமாலயப் பணியாகக் கருதப்படுகிறது.
காசாவைப் பாதுகாக்கும் சர்வதேச நிலைத்தன்மைப் படைக்கு மேஜர் ஜெனரல் ஜாஸ்பர் ஜெஃபர்ஸ் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், ஹமாஸ் அமைப்பை எவ்வாறு ஆயுதங்களைக் கைவிடச் செய்வது மற்றும் இஸ்ரேலியப் படைகளை எவ்வாறு வெளியேற்றுவது என்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
இந்தத் திட்டம் தற்போது காகித அளவில் மட்டுமே உள்ள நிலையில், களத்தில் பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்க்கையில் இது எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும்.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri