மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாலுள்ள கடைகள் அகற்றல்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணியை முன்னிட்டு நிலையத்திற்கு முன்னால் கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகள் இடித்து இன்று (24.02.2026) அகற்றப்பட்டுள்ளன.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்த எதிர்ப்பை மீறி கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இவை சட்டத்து புறம்பாக அமைக்கப்பட்ட கடைகளாகும். மத்திய பேருந்து நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்ட பின்னர் இவ்வாறான தற்காலிக கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் வழங்கப்படவுள்ளன.
புனரமைப்புப் பணிகள்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு 424 மில்லியன் ரூபாய் ஆகும்.

புதுப்பித்தலின் கீழ், புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளன. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் முன்னெடுக்கப்படுகின்றன.