பணம் இல்லை! 100 ரூபாயேனும் தாருங்கள் - பொதுமக்கள் முன்னிலையில் ஞானசாரர்
செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபலசேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
கொழும்பு, இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர்,
"பௌத்த பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்லர். நாட்டின் பாதுகாப்புக்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமையாகும்.
அரசியல் பங்களிப்பு
சோழர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஆக்கிரமிப்பாளர்களால் கூட சிங்கள பிக்குகளின் செல்வாக்கைச் சிதைக்க முடியவில்லை. தற்போதைய அரசு மட்டுமன்றி, கடந்த கால அரசுகளிலும் பிக்குகளின் அரசியல் பங்களிப்பு காத்திரமாக இருந்தது.

ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரின் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹன்சாட் அறிக்கைகளே இதற்குச் சான்றாகும். நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளன.
எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்த வேண்டும். தற்போது எனக்கு எதிராகப் பல அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டும் முடக்கப்பட்டுள்ளது.
உண்மைத் தகவல்களைச் சமூகத்துக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. எமக்கு எதிரான சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கவும், விகாரையைப் புனரமைக்கவும் போதிய நிதி வசதி இல்லை.
இதற்காக 'ஜாதிக பின்கெட' (தேசிய புண்ணியத் தராசு) எனும் பெயரில் புதிய வங்கிக் கணக்கொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நீதிப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவோர், ஆகக்குறைந்தது 100 ரூபாவையேனும் அந்தக் கணக்கில் வைப்பிலிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்." என்றார்.