விவசாய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
விவசாயத் திட்டங்கள் என்ற பெயரிலான முதலீடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக விவசாயத் திட்டங்கள் என்ற போர்வையில் பொதுமக்களிடம் இருந்து நிதி மற்றும் வைப்புகளைப் பெறும் மோசடி வியாபாரங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்களில் பெரும்பாலானவை சட்டவிரோதமான முறையில் வைப்புகளைப் பெறும் திட்டங்கள் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வங்கியின் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைப் பிரிவு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ விவசாயத் திட்டத்தைக் காண்பித்து பொதுமக்களிடம் பணம் கோரினால், அதற்கு மாதந்தோறும் ஒரு தொகையையோ அல்லது திட்டத்தின் முடிவில் பெரும் லாபத்தையோ தருவதாகக் கூறினால், அது சட்டவிரோத வைப்புச் சேகரிப்பாகவே கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருவர் தனது சொந்தப் பணத்தில் விவசாயத் திட்டம் செய்து முன்னேறுவதில் எந்தத் தடையும் இல்லை என்றாலும், பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று இவ்வாறான தொழில்களை நடத்துவது சிக்கலானது என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பல திட்டங்கள் 'பிரமிட்' மோசடிகளின் தன்மையைக் கொண்டுள்ளன. இதில் புதிதாகச் சேர்பவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, பழைய உறுப்பினர்களுக்குச் செலுத்தும் முறையே பின்பற்றப்படுகிறது.
இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும், ஏற்கனவே இதுபோன்ற இடங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால், அவற்றை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருவேளை அந்த நிறுவனங்கள் பணத்தைத் திரும்பத் தரத் தயங்கினால், அது குறித்து உடனடியாக மத்திய வங்கியில் முறைப்பாடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான முறைப்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய வங்கி தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்டவிரோத வியாபாரங்களை விளம்பரப்படுத்துவது தொடர்பாக ஊடக நிறுவனங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தொலைக்காட்சி நாலைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளும் போது, அந்த நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் அனுமதி உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது ஊடகங்களின் நன்னடத்தை சார்ந்த மற்றும் சட்டப்பூர்வமான கடமையாகும் என தெரிவித்துள்ளார்.
நிதிச் சட்டச் விதிகளின்படி, மத்திய வங்கியின் அனுமதியின்றி வைப்புகளைப் பெறுவது தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவது குற்றமாகலாம் என ஆளுனர் தெரிவித்துள்ளார்.
சில விளம்பரங்கள் மேலோட்டமாக விவசாயத் திட்டத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாலும், அதில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளும் போது மக்கள் பணத்தை வைப்பு செய்யவே தூண்டப்படுகிறார்கள். எனவே இவ்வாறான விளம்பரங்களை வெளியிடும் போது மிகவும் கவனமாக இருக்குமாறும், அவற்றின் உண்மையான நோக்கத்தைக் கண்டறியுமாறும் ஆளுநர் அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பாவி மக்களின் பணம் இதுபோன்ற மோசடி வியாபாரங்களில் சிக்கி அழியாமல் தடுப்பதற்குப் பொதுமக்களும் ஊடகங்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.