இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளம்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று வேளை உணவை கூட பெற்றுக்கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை எந்தளவுக்கு நியாயமானது.
சுயாதீனம் என்று குறிப்பிட்டுக்கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவுகள்
மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே ' புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.
நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள்.வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகின்றார்கள்.
இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக்கொள்கின்றது.
ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |