விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டு நாட்கள் தோண்டியும் ஏமாற்றம்
புதிய இணைப்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமாரசாமி புரம் கிராம அலுவலகர் பிரிவில் விடுதலைப்புலிகள் தங்கம் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
றெட்பானான சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது நாளாக இன்றும்(20.02.2024) அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தங்கம் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்துவைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், தங்கம் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது.
குறித்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு
கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி மாவட்ட குமாரசாமிபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டாவது நாளாகவும் புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு இடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தர்மபுரம் பொலிஸார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (19.02.2024) குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று (20.02.2024) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு
இந்த அகழ்வை முன்னெடுப்பதற்காக வீதிகள் மற்றும் குறித்த காணியினை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், கிராம அலுவலகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடி நின்ற நிலையில் உட்செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..
இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி இருந்ததுடன், குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப்புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தோண்டும் நடவடிக்கை
அந்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் ஒரு அறையின் ஒரு பகுதியில் நிலத்தில் சுமார் 4 அடி வரை நேற்று தோண்டப்பட்டுள்ளது.
எனினும், எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |