இனப்படுகொலை தொடர்பான அருட்தந்தையின் கருத்தை கத்தோலிக்க திருச்சபை நிராகரிப்பு
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இனப்படுகொலை நடைபெற்றதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும், கண்டனம் தெரிவித்துள்ளன.
'அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் கத்தோலிக்க திருச்சபையின் கருத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் தனது சொந்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார் என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூகத் தொடர்புகளுக்கான ஆயர் ஆணைக்குழுவின் தலைவரும், ஆயருமான ஜூட் நிஷாந்த சில்வா விசேட அறிக்கையொன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
'இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை எப்போதும் நல்லிணக்க, சமூக உரையாடல் மற்றும் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் மதித்தல் ஆகியவற்றுக்காக செயற்பட்டது: தொடர்ந்தும் செயற்படும்' என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை
அதேநேரம், இலங்கையில் நடந்த போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே தவிர, எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரான போர் அல்ல என்று தேசிய சமூகத் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

'தலதா மாளிகை, அரந்தலாவயில் பிக்குகள் படுகொலை, மத்திய வங்கி, புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் தெஹிவளையில் ஒரு புகையிரதம் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டியிருந்தது' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்த கருத்துக்களை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும், நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளன.
30 ஆண்டு காலப் போர்
இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டே கடந்த 30 ஆண்டு காலப் போர் நடைபெற்றதாக அருட்தந்தை பீரிஸின் கருத்துக்களுக்கு, குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பிலேயே கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளன.