ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு: இந்திய நாட்டவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
இலங்கையில் 2024ஆம் ஆண்டு, லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளின் போது ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய (India) நாட்டவரான ஆகாஸ் பச்லோடியாவுக்கு 10 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு 11 மில்லியன் ரூபா அபராதத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச்சில் கண்டி பல்லேகெலேயில் நடைபெற்ற 2024 - லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில், பச்லோடியா பஞ்சாப் ரோயல்ஸ் அணியின் மேலாளராக பணியாற்றினார்.
முந்தைய குற்றச்சாட்டுக்கள்
முன்னதாக, ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய கிரிக்கெட் மேலாளர் யோனி பட்டேல் மற்றும் ஆகாஸ் பச்லோடியா ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஓய்வுபெற்ற சர்வதேச துடுப்பாட்ட வீரர்களின் ஏழு அணிகள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் (Legends Cricket League) போட்டி கடந்த மார்ச் மாதம் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
கண்டி சாம்ப் ஆர்மி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க மற்றும் பஞ்சாப் ரோயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நியூசிலாந்தின் முன்னாள் வீரர் நீல் புரூம் ஆகியோரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து நீதவான் விசாரணை தொடங்கியது.
இதன்போது, ஆட்ட நிர்ணய சதி ஒப்பந்தங்களை செய்துக்கொள்வதற்கு தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இருவரும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |