பொதுத்தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பொதுத்தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கோரல் மற்றும் வாக்களிப்பு திகதியை நிர்ணயித்தும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் தவறை சீர்திருத்துமாறு கோரியும், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறும் இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அபி ஶ்ரீ லங்கா -நாங்கள் இலங்கையா் என்ற அமைப்பின் தலைவர், சமூக ஆர்வலர் ஶ்ரீயந்த ஹேரத் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க, 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்தும், ஓக்டோபர் 11 ஆம் திகதி வரை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளவும், நவம்பர் 14 ஆம் திகதி வாக்களிப்பு தினமாக அறிவித்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் திருத்தச்சட்டங்கள்
1988ம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டங்களின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பத்து நாட்களின் பின்னரே வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் என்றும், ஆனால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அந்த சட்டங்களை மீறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மேற்படாமலும் உள்ள திகதியொன்றை வாக்களிப்புக்கான தினமாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பிரகாரம் வாக்களிப்புக்கான திகதி நவம்பர் 15 முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அந்த வகையில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வழக்கு விசாரணை முடிவடையும் வரை குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறும், தனது மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், வர்த்தமானி அறிவித்தலில் உள்ள தவறை சீரமைக்க உத்தரவிடுமாறும் அவர் தனது மனுவின் ஊடாக உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |