நாமலுக்கு எதிரான வழக்கில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று(29.01.2026) இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரான நாமல் ராஜபக்ச உட்பட நான்கு சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், சம்பவம் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இதனால், குறித்த முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது முறைகேடாக ஈட்டிய பணத்தை, நிறுவனம் ஒன்றைப் பராமரிப்பதன் ஊடாக பணமோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.