முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு..
முன்னாள் வர்த்தக அமைச்சராக பதவி வகித்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசிற்கு நட்டம் விளைவித்ததாக ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விசாரணை
இந்த வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
சதொச நிறுவனத்தின் முன்னாள் நிதி பணிப்பாளர் நிமேஷா சஞ்சீவனி சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. பிரதி சொலிசுட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வழக்கு தாக்கல்
கடந்த 2010 முதல் 2014 வரையிலான காலப் பகுதியில் வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவன ஊழியர்களை தங்களது சட்டபூர்வ கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



