ஜீவனுக்கு எதிரான முறைப்பாடு மீளப் பெறப்பட்டது
அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் ஆகியோருக்கு எதிராக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.
நானுஓயா உடரதல்ல தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த முப்பது நாட்களாக தோட்ட தொழிலாளர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஜூவனுக்கு எதிராக வழக்கு
இதனை அடுத்து நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தோட்ட தலைவர்கள் உட்பட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து அன்று மாலையில் நுவரெலியா பீட்ரு தோட்ட தொழிற்சாலைக்கு சென்ற அமைச்சர் ஜீவன் உள்ளிட்டோர் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தோட்ட அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குறித்த தோட்ட தலைவர்கள் மூவருக்கு மீண்டும் தொழில் பெற்றுக் கொடுத்தனர்.
இந்தநிலையில், களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தோட்ட அதிகாரிகளால் அமைச்சரான ஜீவன் தொண்டமானுக்கும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேலுக்கும் எதிராக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தனர்.
பீட்ரு தோட்டத்தில் கடந்த (30) திகதி தவறான முறையில் செயற்பட்டனர் என தெரிவித்து குறித்த இருவருக்கும் எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று (01) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமானும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சுமார் இரண்டரைமணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு மீளப் பெறப்பட்டது.
குறித்த நேரத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய பகுதிகளில் அதிகமாக தோட்ட தொழிலாளர்களும் தோட்ட தலைவர்களும் வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |