இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு: நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்
'புதிய சுதந்திரன்' இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி முன்னெடுப்பதற்குத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கு இன்று (13) நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் அகிலன் முத்துக்குமாரசாமி அந்தப் பத்திரிகையில் வரைந்த செய்திக் கட்டுரை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என வழக்கின் எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் குற்றம் சுமத்தி உள்ளது.
விசாரணை
இந்த நிலையில், அந்த விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் இன்று திகதி நிர்ணயம் செய்தது.
இந்த விடயத்துக்காக வழக்கின் எதிராளியாகச் சுட்டப்பட்டுள்ள அகிலன் முத்துக்குமாரசாமி இன்று நீதிமன்ற விசாரணைக்கு சமூகம் தரவில்லை.
எனினும், அவர் சார்பில் சட்டத்தரணி பிரசன்னமாகி இருந்தார். வழக்குத் தவணைக்கு அகிலன் முத்துக்குமாரசாமி வருகை தராத நிலையில் அவருக்கு எதிராகப் பிடிவிறாந்து பிறப்பிக்கச் சட்டத்தரணி சுமந்திரன் கோரினார்.
நீதிமன்றம் முடிவு
எனினும், அவர் வெளிநாட்டில் இருக்கிறார் எனவும், அவர் பயணம் செய்ய உகந்த நிலையில் இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவச் சான்றிதழை அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் அவருக்கு இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாக இல்லாமல் இருக்க அனுமதிப்பது என நீதிமன்றம் முடிவு செய்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |