இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநருடன் மிலிந்த மொராகொட விசேட சந்திப்பு (Photos)
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திஹன்ட தாசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் உயர் அதிகாரிகளுடனான தனது ஈடுபாட்டை தொடரும் இலங்கை தூதுவர் மும்பையில் இந்திய ரிசேர்வ் வங்கியின் தலைமையகத்தில் ரிசேர்வ் வங்கியின் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளன, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உதவிகளிற்கு இந்த சந்திப்பில் மிலிந்தமொராகொட நன்றியை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்திய ரிசேர்வ் வங்கியின் நேரடி தலையீட்டுடன் இடம்பெற்ற பரிமாற்ற ஏற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் போன்றவற்றிற்கு மிலிந்தமொராகொட நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிவகைகள்
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பதில் இந்தியா ஆற்றிய பங்களிப்பிற்காகவும் மிலிந்த மொராகொட நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநரும் இலங்கை தூதுவரும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் பொருளாதாரங்களை அதிகளவில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியா இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு வழங்ககூடிய பங்களிப்பு குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
குறிப்பாக இந்திய ரூபாய் விரிவாக்கம் குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.