வேட்பாளர்கள் சம வாக்குகளைப் பெற்றால் ஜனாதிபதியை தெரியும் முறை..! (Video)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செயத்தனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் ஆட்சியில் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
எனினும், அரசியல் அமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றில் தேர்தல் ஒன்றை நடத்தி அதன் ஊடாகவே ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக் காலத்திற்கு முன்னதாக பதவியை இராஜினாமா செய்தார் எனின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க முடியும்.

1981ம் ஆண்டு இரண்டாம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு தேர்தல் நடாத்தப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலை யார் நடாத்துவார்கள்?
இந்த தேர்தலை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நடத்துவார்.
சபாநாயகர் வாக்களிக்க முடியுமா?
இந்த தேர்தலில் சபாநாயகரும் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலை நடாத்தும் நோக்கில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும்.
எவ்வளவு காலத்தில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்?
வெற்றிடம் ஏற்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும், வெகு சீக்கிரம் தேர்தலை நடாத்த வேண்டும்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டதன் பின்னர் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.
இந்த தேர்தலின் போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக கடமையாற்றுவார்.
ஜனாதிபதி பதவிக்காக எவ்வாறு பிரேரிப்பது?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளரை பிரேரிக்க முடியும், எனினும், அவ்வாறு பிரேரிப்பவரின் எழுத்து மூல ஒப்புதல் அவசியமானது.
ஒருவரின் பெயர் மட்டும் பிரேரிக்கப்பட்டால் தேர்தல் நடாத்தப்படாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டால் வாக்கெடுப்பு நடாத்தப்படும்.
எவ்வாறு வாக்களிப்பது தெரிவத்தாட்சி அதிகாரி சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் ஒவ்வொன்றாக அழைத்து வாக்குச்சீட்டுக்களை வழங்குவார்.
பெயர் கூப்பிடும் போது வேட்பாளர் ஒருவர் பிரசன்னமாகத் தவறினால் வாக்கெடுப்பின் நிறைவில் மீளவும் அவரது பெயர் கூப்பிடப்படும்.
அந்த சந்தர்ப்பத்திலும் அவர் பிரசன்னமாகத் தவறினால், அவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என கருதப்படும். வாக்குச் சீட்டு வாக்குச் சீட்டில் வேடபாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒருவருக்கு வாக்களிக்க வேண்டுமானால் குறித்த பெயரின் எதிரில் உள்ள பெட்டியில் 1 என குறிப்பிட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்க முடியுமா?

ஆம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்க முடியும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது விருப்பத் தெரிவினை ஒழுங்கு வரிசையின் அடிப்படையில் குறிப்பிட முடியும்.
வாக்கு எண்ணும் போது வேட்பாளர்கள் அதனை பார்வையிட முடியுமா?
ஆம் வேட்பாளர் அல்லது அவரது அதிகாரபூர்வ பிரதிநிதியொருவர் வாக்கு எண்ணும் நடவடிக்கைகைள பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
வெற்றியாளர் எவ்வாறு தீர்மானிக்கப்படுவார்?
வாக்கெடுப்பின் அரைவாசிக்கும் மேற்பட்ட வேட்பாளர் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார்.
எந்தவொரு வேட்பாளரும் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளத் தவறினால்? இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்.
மேலும் இந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் வாக்குச் சீட்டின் இரண்டாம் விருப்பத் தெரிவுகள் கணக்கெடுக்கப்பட்டு, இதன் மூலம் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.
இந்த சந்தர்ப்பத்திலும் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுக்கொள்ள எந்தவொரு வேட்பாளரும் தவறியிருந்தால், வேட்பாளர்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் சம அளவில் வாக்குகள் பெற்றிருந்தால்?
இதன் போது தெரிவத்தாட்சி அதிகாரி சீட்டிலுப்பு முறையில் வேட்பாளர்களில் ஒருவரை வெற்றியாளராக அறிவிப்பார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழப்பெரும, சஜித் பிரேமதாச, மைத்திரிபாலசிறிசேன, சரத் பொன்சேகா என பலரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்காக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
