தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனிக்கும் கனடா
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் குறிப்பிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கனேடிய தூதுவருடனான சந்திப்பு பற்றி இன்று (14.02.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க கனடா விரும்புகின்றதென எரிக் வோல்ஸ் உறுதியளித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு அழுத்தம்
மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு அவர்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கனடாவும் இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் தூதுவர் தன்னிடம் கூறியுள்ளதாகவும் சிறீதரன் எம்பி தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட் மற்றும் அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |