மிகப் பெரிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடாக கனடா இருப்பதை கண்டு கனேடிய உயர்ஸ்தானிகர் பெருமிதம்
பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்துடனும், ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயல்படுவதாக கனடா தெரிவித்துள்ளது.
2021, ஜூலை முதலாம் திகதி கனடா தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உலகெங்கிலும் உள்ள கனேடியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலோ அல்லது உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுடனோ இன்றைய நிகழ்வை நினைவு கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
கனடாவில் தடுப்பூசி முயற்சிகளைத் தொடர்கையில், இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளுக்கும் உதவிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா தினம் என்பது கனடாவின் மிகப் பெரிய பலத்தின் கொண்டாட்டமாகும். இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமிருந்து குடியேறியவர்களை - நிரந்தர குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏதிலிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ள கனேடிய உயர்ஸ்தானிகர், மிகப் பெரிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடாக கனடா இருப்பதை கண்டு பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கை தமிழ் சமூகம் மற்றும் சிங்கள, முஸ்லpம்களை கனடா கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் மனித உரிமைக்காப்பு, பொருளாதார வளர்ச்சி, பெண்கள் ஊக்குவிப்பு திட்டங்களில் கனடா தமது பங்களிப்பை வழங்கும் என்று மெக்கினன் தெரிவித்துள்ளார்.