உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை அதன்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும்.
14 நாட்கள் அவகாசம்..
வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும்.
உயர் நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும். அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது.
அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.