குடும்பத்துடன் சென்ற வர்த்தகர் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தல் - மனைவி காயம் - தப்பிய மகள்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் வர்த்தகர் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத குழுவினால் கடத்தப்பட்டுள்ளார்.
பாணந்துறை, மகாநாம வீதிக்கு அருகில் உள்ள உப வீதியொன்றில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது இரு மகள்களுடனும் மனைவியுடனும் காரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
வர்த்தகர் கடத்தல்
இதன் போது, வீட்டிற்கு அருகில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வர்த்தகரைத் தாக்கி அவரது காரின் கண்ணாடிகளை உடைத்துக் கடத்திச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் வர்த்தகரின் இரு மகள்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்த மனைவி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத குழுவினர் குறித்த வர்த்தகரைக் கடத்த முயன்றபோது, வர்த்தகர் தனது காரை நிறுத்தாமல் தொடர்ந்தும் செலுத்தியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்த வடிகானில் விழுந்துள்ளது. பின்னர் கடத்தல் கும்பல், வர்த்தகரின் காரின் கண்ணாடிகளை உடைத்து, வர்த்தகரை வெளியே இழுத்துத் தாக்கியதுடன், அவர்களின் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்ட கடத்தல் நடவடிக்கையின் போது வர்த்தகரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலை வர்த்தகரின் உறவினர் ஒருவரே திட்டமிட்டு கடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பாணந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.