இலங்கையில் இந்தியாவின் ரூபாவை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம்...! வீழ்ச்சியடையும் வர்த்தகங்கள்
அடுத்த ஒரு மாத காலத்தில் தமது வர்த்தகங்கள் அனைத்தும் வீழ்ச்சியடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடித்தால், இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்தும் நிலைமை உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் தமது வர்த்தகத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் கூறியுள்ளது.
சேமித்து வைத்திருந்த பணத்திலேயே இதுவரை வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் தொடர்ந்தும் அப்படி செய்ய முடியாத கஷ்டமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவி டானியா அபயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பணத்தை அச்சிட இயந்திரங்களை வழங்குங்கள்
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடப் போவதாக பிரதமர் கூறியுள்ளார். அப்போது தனியார் துறை ஊழியர்களின் நிலைமை என்னவாகும்.
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணம் அச்சிடப்படுமாயின், பணத்தை அச்சிட எங்களுக்கு இயந்திரங்களை வழங்குங்கள். இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை பிரதிநிதித்துப்படுத்துகிறது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் என்பது நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவற்றை பாதுகாக்க எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அனைவரும் தாம் கரைசேர எம்மை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாட்டு பொருளாதாரத்தின் பிரதான முதுகெலும்பான நாங்கள் நடுத் தெருவுக்கு வந்துள்ளோம்.
நாட்டுக்கு என்ன செய்தோம் என்பதை மனசாட்சியை தட்டி கேளுங்கள் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரிடமும் கோருகிறோம்.
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடப் போவதாக பிரதமர் கூறுகிறார். நாங்கள் எமது ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்கவும் வங்கி கடனை செலுத்த முடியாமலும் சிரமப்படுகிறோம்.
எமக்காக அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள பாதுகாக்க வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் டானியா அபயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ரூபாயை பயன்படுத்தும் நிலைமை ஏற்படலாம்
அதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படக் கூடும் என இலங்கை கணக்காய்வு திணைக்களத்தின் முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பஞ்சம் காரணமாக மக்கள் வீதிகளில் இறக்க நேரிடலாம். இதனை தடுக்க தற்போதே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் ஆபத்தை ஆட்சியாளர்கள் உணரவில்லை. இந்த நிலைமை தொடருமாயின் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, சுனாமியை விட பேரழிவு ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு தேவையான பசளை உள்ளிட்ட பொருட்களை வழங்கி விவசாயத்தை கட்டியெழுப்ப வேண்டும். அப்படியில்லை என்றால், அரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்.
எனினும் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் பணமில்லை. அத்துடன் நாட்டின் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை நீடித்தால், இந்தியாவின் ரூபாயை பயன்படுத்தும் நிலைமை உருவாகும்.
இந்தியாவுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் அரசாங்கம் கவனமாக செயற்பட வேண்டும். இந்தியாவிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைமை உருவானால், நாட்டின் துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் காமினி விஜேசிங்க கூறியுள்ளார்.