அம்பாறையில் நிர்வாக முடக்கல் கோரிக்கையினை நிராகரித்து வழமைப்போல் இயங்கும் தொழில் நடவடிக்கைகள்(Photos)
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமுடக்கம் இடம்பெற்றுவரும் நிலையில் அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பெரியநீலாவணை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில் , பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியுள்ளது.
இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்ததுடன். இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் கடைகள் யாவும் திறக்கப்படவில்லை. மேலும் வியாபார நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்ட போதிலும் மட்டுப்படுத்த மட்டில் சேவைகளும் கட்டுப்பாட்டுகளுடனும் தமது செயற்பாட்டில் ஈடுபட்டன.
அரச நிறுவனங்கள் பல மூடப்பட்டிருந்ததுடன் உத்தியோகத்தர்களின் வரவு வீதமும் மந்த கதியில் இருந்துள்ளது. மேலும் குறித்த பகுதியில் பொதுப்போக்குவரத்துகளானது வழமை போன்று இடம்பெற்றுள்ளது.
நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்படுவதை அம்பாறை மாவட்டத்தில் மக்கள் ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.








