வடமராட்சி கிழக்குக்கு வினைத்திறனான பேருந்து சேவை தேவையென கோரிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்குக்கான வினைத்திறன் மிக்க பேருந்து சேவைகளை நடத்துமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில், அதிகளவான பயணிகள் பயணித்தமையால், நாகர்கோவில் சந்தியில் பயணத்திற்காக காத்திருந்த நோயாளிகள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் ஆகியோரை பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது.
பரிதவித்து நின்ற பயணிகள்
அதனால் பலரும் தமது பயணத்தை தொடர முடியாது, பரிதவித்து நின்றுள்ளனர்.

பின்னர், அவ்வீதி வழியாக வந்த தனியார் வாகனங்களில் சிலர் ஏறி தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
தமக்கான போக்குவரத்து சேவைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரி உள்ள போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.