திடீரென பாலத்தில் கவிழ்ந்த பேருந்து: 15 பேர் உயிரிழப்பு - இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (09.05.2023) அதிகாலை மத்தியப் பிரதேச மாநிலத்தின் தசங்கா பகுதியிலுள்ள டோங்கர்கான் பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
மீட்புப் பணி தீவிரம்
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பேருந்து ஒன்று சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளது.
குறித்த பேருந்து டோங்கர்கான் பாலத்தின் மீது சென்றபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி பாலத்தில் இருந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிவாரணம் வழங்கம் முதலமைச்சர்
இதுகுறித்து அப்பகுதி பொலிஸ் கண்காணிப்பாளர் (எஸ்பி) தரம்வீர் சிங் (Dharamveer Singh) கூறுகையில், "டோங்கர்கான் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். மற்றும் 25 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபாவும், படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும், சிறு காயங்களுக்குள்ளான 25,000 ரூபாவும் நிவாரணம் வழங்க மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan) உத்தரவிட்டுள்ளார்.