மன்னார் பிரதேசசபையின் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு! இடைநடுவே வெளியேறிய தவிசாளர்
மன்னார் பிரதேசசபையின் 18வது அமர்வு நேற்றைய தினம் (18.11.2026) இடம்பெற்றது.
இதன்போது 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு தொடர்பில் ஏகமனதான ஆதரவு தவிசாளரினால் கோரப்பட்டது .
இதில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சிகளும் தங்களது நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
வாக்களிப்பு
குறிப்பாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஜே.எம்.ஜப்ரானின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியான கருத்துக்கள், அபிவிருத்தியில் பாராபட்சம், இன்னும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்காக தவிசாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கெடுப்பின்போது 22 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்து கொண்டிருக்கும் நிலையில் ஏனைய உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்வதற்கு முன்னர் தவிசாளர் தன் அதிகாரத்தின் நிமித்தம் சபையை ஒத்திவைத்து எழுந்து சென்றுள்ளார்.
சபை ஒத்திவைப்பு
வாக்களித்தவர்களில் உதவி தவிசாளர் உட்பட 6 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் தொடர்ந்து 2 உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் தவிசாளர் வாக்கெடுப்பின் இடைநடுவில் சபையை ஒத்திவைத்து வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேசசபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடை நடுவே ஒத்தி வைத்து தவிசாளர் வெளியேறியமை தொடர்பாக சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
