கிராம மட்ட அபிவிருத்தியை நோக்காக கொண்டே இந்த பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது - சந்திரகாந்தன் (Video))
அரசாங்கம் இம்முறை கிராமமட்ட அபிவிருத்தியை நோக்காக கொண்டு வரவு - செலவு திட்டத்தினை தயாரித்துள்ளது என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டம் ஊடாக கிராமிய பொருளாதாரத்தின் ஊடாக உணவுப்பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வரவு செலவு திட்டம் ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவுகள் ஊடாக வரவு - செலவு திட்டம் ஊடாக கிராம மட்ட உற்பத்தி செயற்றிட்டங்கள் ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது.
மட்டக்களப்பில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் விசேட கவனம் செலுத்தப்பட்டு இந்த கிராமிய உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது உரையாற்றிய அவர்,
நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் கிராமிய பொருளாதாரத்தினை உயர்த்தி பஞ்சம், பட்டினியில்லாமல் போசாக்கான சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.
அந்த அடிப்படையிலேயே இந்த வரவு - செலவு திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் (T. Saravanapavan), மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் (K. Karunakaran), மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் (V.Vasudevan), உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் (Sudarshan), அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் யோ.ரொஸ்மன் (Y.Rosman) உட்பட பலர் கலந்துகொண்டனர்.




