புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு
கொழும்பு - ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கங்காராம விகாரைக்கு வருகைதந்த பிரதமர் மற்றும் அவரது பாரியார் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பிரிவெனா கல்வி கற்கும் இளம் பிக்குமார் 100 பேருக்கு புலமைப்பரிசில் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சாமனேரு காப்புறுதி' என்ற உதவித்தொகை வழங்கலைக் குறிக்கும் வகையில் பிரதமர் இளம் பிக்குமார்களிற்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்துள்ளார்.
கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் இதன்போது அனுசாசனமொன்றை நிகழ்த்தியுள்ளார்.வெசாக் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, கோவிட் -19 தொற்றின் அபாயத்தை எடுத்துரைக்கும் வகையில் இம்முறை புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் ,மக்களுக்கு அதனைப் பார்வையிடுவதற்கு முடியாதுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் கங்காராம எல்லை அருகே புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயத்தை உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில், அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் வல்பொல பியனந்த தேரர், மாத்தறை ஹிந்தெடிய ரஜமஹா விகாரை மற்றும் கொட்டாவ மாலபல்ல ஸ்ரீ சுதர்ஷனாராம அதிபதி மற்றும் முன்னாள் மேல் மாகாண பிரிவெனா கல்வி இயக்குநர், அக்ரஹேர கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.





