பௌத்த மாநாடு படுதோல்வி! சஜித் தொடர்பில் அமைச்சர் லால்காந்தவின் நையாண்டி பேச்சு
அரசுக்குப் பாடம் கற்பிப்பதாகக் கூறிக்கொண்டு கொழும்பில் நடத்தப்பட்ட பௌத்த சங்க சம்மேளனம் படுதோல்வியடைந்துள்ளது என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை ( 24.02.2026 ) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சங்க சம்மேளனம்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் காலங்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய அனைத்துத் தரப்பினரும் இன்று நண்பர்களாகக் கைகோர்த்துள்ளார்கள்.

கடந்த கால ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, அதைக் கண்டு அச்சமடைந்துள்ளவர்களே இன்று அரசுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற பௌத்த சங்க சம்மேளனம் முழுமையான தோல்வியைத் தழுவியுள்ளது ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கிடையாது.
இந்த மாநாட்டை எதற்காக நடத்தினார்கள் என்பது அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது.
அரசுக்கு எதிராக எங்கு போராட்டமோ அல்லது மாநாடோ நடந்தாலும், அங்கு சென்று அமர்ந்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளார்.
குறுகிய அரசியல் இலாபத்துக்காக இத்தகைய தவறான செயற்பாடுகளுக்குத் துணை போக வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று வலியுறுத்தியுள்ளார்.