உயிரை மாய்த்துக் கொண்ட காலி முகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளர்! விசாரணைகளில் வெளியான தகவல்
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் முன்னின்று செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்னும் இளைஞன் தவறான முடிவினை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், மனஉளைச்சல் நோய்க்கு உட்கொள்ளப்படும் மாத்திரைகளை அதிகளவு எடுத்திருப்பதன் காரணமாக இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
போராட்டக் களத்தில் முன்னின்றவர்
கடந்த வருடம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்த இந்த இளைஞனின் சடலம் முல்லேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் காலி முகத்திடல் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதலாவது கூடாரத்தை அமைத்த நபரெனவும், இவர் ஜனாதிபதி காரியாலய முன்றிலில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் அறிவிப்பாளராக முதல் தடவையாக போராட்டக்காரர்கள் முன்னிலையில் உரையாற்றியவர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிம்புட்டான லேனில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்ததாகவும், கடந்த 18 ஆம் திகதி இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக 119 இலக்கத்துக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அதிகாரிகள் குழுவொன்று மேற்குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட நபர் கட்டிலில் இறந்து கிடப்பதை கண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சடலம் தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட பொழுது மனஉளைச்சல் நோய்க்கு உட்கொள்ளப்படும் மாத்திரைகளை அதிகளவு எடுத்திருப்பதன் காரணமாக இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி மரணமடைந்த நபரின் பூதவுடல் மகரகம பிரதேசத்தில் உள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு கடந்த 19ஆம் திகதி மாலை கொடிகமுவ பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என்றும் போராட்டத்தின் நோக்கம் இதுவரை நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கடந்த காலங்களில் அவர் விரக்தியில் காணப்பட்டதாகவும், அது தொடர்பாக அவர் சமூக ஊடகங்கள் மூலம் கருத்துகள் பகிர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.