மகாவலி கங்கையில் மாயமான சகோதரர்களில் ஒருவர் மீட்பு - சுழியோடிகள் தீவிர சோதனை
புதிய இணைப்பு
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோமாவதி பாலத்திற்கு அடியில், ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரது சடலம் இன்று(15.04.2026) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் லக்சான் பெரேரா (35 வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் மூவர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதுடன், தந்தை மாத்திரம் உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(14.04.2026) மாலை இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில் மாயமானவர்களை மீட்கும் பணிகள் இன்று(15.04.2026) காலை வரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சோமாவதி- சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக,நேற்று மாலை நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக சகோதரர்கள் மூவரும் நீரினால் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
சகோதரர்கள் மூவர் மாயம்
சம்பவம் குறித்து தகவலறிந்த பிரதேச மக்களும், கடற்படையினரும் இணைந்து நேற்று மாலையிலிருந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இன்று (15) காலை 8 மணி வரையான நிலவரப்படி மாயமான மூவர் குறித்தும் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படையினரின் சுழியோடிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குளத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

