பரந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கப்படும்! நவீன் மற்றும் அர்ஜூன ரணதுங்க அறிவிப்பு
ஒரு பரந்த எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய அவர்கள் இதனை கூறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சரியான தலைமைத்துவம் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளனர். கட்சிக்கு ஒரு புதிய தலைவர் இருக்க வேண்டும் என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், தான் தொடர்ந்தும் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுவேன் என குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் மாற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இரு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு பரந்த எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப் பார்ப்போம் என்று இருவரும் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நாங்கள் பணியாற்றுவோம் என்று நம்புகிறோம், ”என்று அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள பொதுவான எதிர்க்கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை இலக்காகக் கொள்வோம் என்று குறித்த இருவரும் தெரிவித்தனர்.
"அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஒரு பொதுவான வேட்பாளராக இருக்க வேண்டும்," என்று நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதிவியில் இருந்து நவீன் திஸாநாயக்க அண்மையில் விலகியிருந்ததுடன், சிரேஷ்ட துணை தவிசாளர் பதவியை அர்ஜுன ரணதுங்க ஏற்க மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.