கொரோனா அச்சுறுத்தல்! - பல நாடுகளுக்கு பயணத்தடை விதித்து பிரித்தானியா அதிரடி நடவடிக்கை
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட முதல் வழக்கு என இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது டெல்டா மாறுபாட்டை விட அதிகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்றும், கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படும் "தனிநபர்களுக்கு இது வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம்" இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், கோவிட் தடுப்பூசி வழங்களில் பிரித்தானியா மிகவும் வலுவான நிலையில்" இருப்பதாக அவர் கூறினார், B.1.1.529 என்று பெயரிடப்பட்ட புதிய மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது,
"வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள்" இருப்பதாக எச்சரித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.
இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிய வகை வைரஸ் பிரித்தானியாவில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இந்த உத்தரவு இன்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வருகிறது. கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது.
எனினும், இந்த 6 நாடுகளில் இருந்து பிரித்தானியா அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வசிப்பவர்கள் அல்லாதவர்கள் குறித்த நாடுகளில் இருந்து பிரித்தானியா வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய மாறுபாடு கண்டறியப்பட்ட பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு தற்காலிகமாக பயணத்தை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எரிக் மாமர் கூறுகையில், இங்கிலாந்தின் நடவடிக்கையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அதே ஆறு நாடுகளுக்கும், மொசாம்பிக் நாடுகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என குறிப்பிடடுள்ளார்.
எவ்வாறாயினும், தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா, மற்ற நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவு "நியாயமற்றது" என்று எச்சரித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவைக் கலந்தாலோசிக்காமல் இங்கிலாந்து கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறிய அவர், இது ஒருதலைப்பட்ச நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.