பறவைக் காய்ச்சலைத் தடுக்க பிரித்தானியாவின் புதிய நடவடிக்கை
பிரித்தானியாவில் வான்கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி போடும் சோதனை திட்டமொன்று நேற்று(05.03.2026) அதிகார பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் (Avian Influenza) பரவலால் பண்ணை மற்றும் வன விலங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக இந்தத் தடுப்பூசி ஆய்வை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதிகப்படியான உயிரிழப்புகள்
இங்கிலாந்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட வான்கோழிகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, அவை எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்பது கண்காணிக்கப்படும்.

வான்கோழிகள் எளிதில் இந்தப் பாதிப்புக்கு உள்ளாவதாலும், அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் இந்தத் தடுப்பூசி சோதனைக்கு அவை முன்னுரிமை அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டமானது சுமார் 24 வாரங்கள் நீடிக்கும் என்றும், கடுமையான நிபுணர் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயிரியல் பாதுகாப்பு
தற்போது வரை பிரித்தானியாவில் கோழிப்பண்ணைகளில் தடுப்பூசி போட அனுமதி இல்லாத நிலையில், இந்தச் சோதனையின் முடிவுகள் எதிர்காலத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய உயிரியல் பாதுகாப்பு அமைச்சர் லேடி ஹேமேன் (Baroness Hayman), விவசாயிகளுக்கும் கோழிப்பண்ணைத் துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் இந்தப் பறவைக் காய்ச்சலுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி சோதனை ஒரு பெரிய முன்னேற்றம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன் மூலம் உணவு விநியோகத்தையும் நாட்டின் உயிரியல் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.