கொங்கோ ஜனநாயக குடியரசு மீது விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரித்தானியா
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களையும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களையும் மீண்டும் பொறுப்பேற்க மறுத்த காரணத்திற்காக, கொங்கோ ஜனநாயகக் குடியரசு மீது பிரித்தானிய அரசாங்கம் விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் புதிய மற்றும் கடுமையான புகலிடக் கொள்கைகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவு விசா நடைமுறைகள் ரத்து
இதன் மூலம், இனி கொங்கோ நாட்டினருக்கான 'விரைவு விசா' (Fast-track visa) நடைமுறைகள் ரத்து செய்யப்படுவதுடன், அந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு (VIPs) வழங்கப்பட்டு வந்த முன்னுரிமைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரித்தானிய உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இது குறித்துக் கூறுகையில், "நாடுகள் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஒரு குடிமகனுக்குப் பிரித்தானியாவில் வசிக்க உரிமை இல்லை என்றால், சம்பந்தப்பட்ட நாடு அவர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனைச் செய்யத் தவறும் நாடுகள் மீது விசா தடைகள் விதிக்கத் தயங்க மாட்டோம்" என எச்சரித்துள்ளார்.
இதே போன்ற எச்சரிக்கை அங்கோலா மற்றும் நமீபியா நாடுகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாடுகள் பிரித்தானியாவுடன் ஒத்துழைக்கச் சம்மதம் தெரிவித்துள்ளன.
அங்கோலா மற்றும் நமீபியா மீதான தடைகள்
இதனால் அங்கோலா மற்றும் நமீபியா மீதான தடைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, கொங்கோ அரசு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்தால், அந்நாட்டு மக்கள் பிரித்தானியா வருவதற்கு முழுமையான விசா தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

பிரித்தானியாவின் புதிய புகலிடக் கொள்கையின் கீழ், அகதி அந்தஸ்து என்பது தற்காலிகமானதாக மாற்றப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கான தங்குமிட வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளைத் தத்தமது நாடுகளுக்கு விரைவாகத் திருப்பி அனுப்பவும் இந்த அதிரடி நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு மேற்கொண்டு வருகிறது.