இந்தியாவின் அர்ப்பணிப்புக்கள்: உயர்ஸ்தானிகர் வணிக தலைவர்களுக்கு விளக்கமளிப்பு
சூறாவளியால் பாதிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற பேரழிவிலிருந்து மீள்வதற்கு புதுடில்லியின் உதவிகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையின் வணிகத்தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்துடன்' தொடர்புடைய இலங்கை வணிகத் தலைவர்களுக்கே, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா விளக்கமளித்துள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதில் இந்தியாவின் பதில் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து இதன்போது தெரிவிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சர்வதேச உதவிக்கான வேண்டுகோள்
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கையின் சர்வதேச உதவிக்கான வேண்டுகோளுக்கு பதிலளித்த முதல் நாடு இந்தியா என்ற விடயத்தை அவர் இன்றைய சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2025 நவம்பர் 28 அன்று ஒபரேசன் சாகர் பந்து ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து உலர் உணவுப் பொருட்கள், கூடாரங்கள், தார்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் சுமார் 4.5 டன் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உட்பட 58 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜெனரேட்டர்கள், ஊதப்பட்ட மீட்புப் படகுகள் மற்றும் வெளிப்புற மோட்டார்கள் உட்பட மேலும் 50 டன் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், முக்கியமான இணைப்பை மீட்டெடுக்க 31 பொறியாளர்களுடன் 130 டன் பெய்லி பால அலகுகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
உயிர்காக்கும் சிகிச்சை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணைப்பை மீட்டெடுக்க முக்கியமான சாலைப் பாதைகளில் பெய்லி பாலங்களை கட்டும் பணிகளை இந்திய பொறியாளர்கள் படைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 300 மெட்ரிக் டன் அரிசி உட்பட 950 டன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலை அனுப்பியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 78 மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட ஒரு முழுமையான கள மருத்துவமனை இப்போது கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் உயிர்காக்கும் சிகிச்சையை வழங்கி வருகிறது.