கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இளைஞன் கடத்தப்பட்டமையால் பரபரப்பு
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் இளைஞனை வெள்ளை வேனில் கடத்தி சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரண்டு வாடகை வண்டி சாரதிகளால் குறித்த இளைஞர் கடத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல், மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். கடத்தல் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், வேனை அடையாளம் கண்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞன்
அதற்கமைய,ஓட்டுநர்கள் இருவரும் தங்கியிருந்த அடியம்பலம் பகுதியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் சோதனை நடத்தினர்.
குறித்த இளைஞன் அறை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது சாரதிகள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளை பாவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த சாரதிகள் இருவரிடமும் 4 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரும் கட்டுநாயக்க பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வலையமைப்பு
போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞன் தவறுதலாக கடத்தப்பட்டதாக சந்தேக நபர்களான சாரதிகள் இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சாரதிகளையும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.