புடினின் எண்ணத்தை மாற்ற வேண்டும்! உக்ரைனுக்கு அமைதிப்படைகளை அனுப்ப போரிஸ் ஜான்சன் அழைப்பு
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகளுக்கு இப்போதே பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் "போர் புரியாத படைகளை" அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரபல ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சனின் வாதம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் எண்ணத்தை மாற்றவும், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் உறுதியான ஆதரவைக் காட்டவும் இது அவசியமான ஒன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிந்த பிறகு அமைதிப்படையை அனுப்பத் திட்டமிடுவதை விட, இப்போதே அமைதியான பிராந்தியங்களுக்குப் படைகளை அனுப்புவது புட்டினுக்கு ஒரு தெளிவான அரசியல் செய்தியைச் சொல்லும் என அவர் வாதிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இன்றுடன் நான்காவது ஆண்டைத் தொடும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் தயக்கமே இந்தப் போர் இவ்வளவு காலம் நீடிக்கக் காரணம் என்று போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
புடினுக்கு துணிச்சலை ஏற்படுத்திய நகர்வு
கடந்த 2014ஆம் ஆண்டு கிரீமியாவை ரஷ்யா இணைத்த போது மேற்கத்திய நாடுகள் அமைதியாக இருந்ததும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வெளியேறியதும் புடினுக்குத் துணிச்சலை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் கேட்ட ஆயுதங்களை வழங்குவதில் நட்பு நாடுகள் காட்டிய காலதாமதம் பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளதாகவும், புடினின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் உக்ரைனை ஒரு சுதந்திர நாடாகப் பாதுகாக்க உலகம் முன்வர வேண்டும்.
தற்போது பிரித்தானிய அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அமைதியைப் பேண "விருப்பமுள்ள நாடுகளின் கூட்டணி" என்ற திட்டத்தின் கீழ் படைகளை அனுப்பத் தயாராகி வருகிறது. ஆனால், போரிஸ் ஜான்சனின் இந்த ஆலோசனையானது தற்போதைய சூழலில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசப் படைகள் உக்ரைனுக்குள் நுழைவது தங்களைத் தூண்டுவதற்குச் சமம் என்றும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் புட்டின் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இருப்பினும், உக்ரைன் ஒரு சுதந்திர நாடா அல்லது ரஷ்யாவின் அடிமை நாடா என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தருணத்தில் இத்தகைய உறுதியான நடவடிக்கைகள் தேவை என்பதே போரிஸ் ஜான்சனின் கருத்தாக உள்ளது.