அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை: பொரலஸ்கமுவ கொலை வழக்கின் சந்தேகநபர் வாக்குமூலம்
பொரலஸ்கமுவ (Boralaskamuva) பிரதேசத்தில் நபரொருவரின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய கொத்தனார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபருக்கும் சந்தேகநபரின் மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருந்ததாக சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் வாக்குமூலம்
அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் கொலை செய்யப்பட்டவருடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்த கொலையை செய்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், சமூகத்தின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் வைத்து கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையை செய்துவிட்டு தப்பிச்செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி வீதியில் உள்ள வடிகாலில் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சந்தேகநபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |