நட்சத்திர ஹோட்டல் வளாகமாக மாறும் போகம்பர சிறைச்சாலை
போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையின் பிரதான வளாகத்தை வர்த்தக கட்டடமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக வளாகம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் என்பனவற்றை உள்ளடக்கியதாக கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களை பாதுகாத்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொது கண்காட்சி
இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டுச் சபையும் இணைந்து இதற்காக தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளதாகவும், அதற்கான மதிப்பீடுகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
138 வருடங்களாக இயங்கி வந்த போகம்பர சிறைச்சாலை மூடப்பட்டதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி அதன் செயற்பாடுகள் பல்லேகலவில் உள்ள புதிய சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
போகம்பர சிறைச்சாலை தற்போது பொது கண்காட்சிக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |